Monday 8 August 2016

திருவல்லிக்கேணி எல்லையம்மன் ரேணுகா பரமேஸ்வரி திருக்கோவில்

எல்லையம்மன் ரேணுகா பரமேஸ்வரி திருக்கோவில்  திருவல்லிக்கேணி


கல்விக்கூடங்கள் நிறைந்த திருவல்லிக்கேணி, தேசிய போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது.  இது ஒரு புண்ணிய பூமி. திருவல்லிக்கேணியில் பல்வேறு சிறிய தெருக்களில் பெரிய கோவில்கள் அமைந்து உள்ளன.

ஒவ்வொரு ஊரையும் காப்பது "எல்லை அம்மன்".  திருவல்லிக்கேணி தேவராஜ முதலி தெருவில் அமைந்துள்ளது எல்லையம்மன் ரேணுகா பரமேஸ்வரி கோயில். இது  300 ஆண்டுகள்  தொன்மை வாய்ந்தது.  நெசவுத் தொழில் செய்து வந்த செங்குந்தர்கள்அஸ்திவாரத்திற்காக நிலத்தை தோண்டும்  போது, அதில் அம்மன் சிலை இருந்ததாக கூறப்படுகிறது. குமரனை குல தெய்வமாக கொண்டவர்களாக இருந்தாலும், தாங்கள் கண்டெடுத்த அம்மன்  சிலையை கோவிலில் வைத்து கொண்டாடினார்கள்.

ஜாம்பஜாரில் இருந்தும், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்தும் இக்கோவிலுக்கு செல்லலாம். திருக்கோவில் உள்ளே  சிறிய  விமானத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறார் ரேணுகா பரமேஸ்வரி அம்மன். கோயிலின் இடதுபுறம் விநாயகர் காட்சியளிக்கிறார். இதையடுத்து  வெளிப்பிரகாரத்தின் இடதுபுறத்தில் நால்வர் சன்னதி அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரை மாதம் சித்திரை வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி, 108 பால்குட அபிஷேகம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.  ஆனி மாதம் பவுர்மணி தினத்தன்று பூச்சொரிதல் விழா, ஆடி மாதம் பிரமோற்சவ திருவிழா மற்றும் கூழ்வார்த்தல் நடைபெறும். இதுதவிர சிவராத்திரி திருவிழா, மாசி மக உற்சவ விழா நடைபெறும்.

இந்த அம்மனை வேண்டினால் தீராத நோய் தீரும், வாழ்வில் வளம் பெருகும், வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.  சமீபத்தில் அம்மன் திருவீதி உலா கண்டு அருளிய பொது எடுக்கப்பட்ட படங்கள் இங்கே.  கடைசி படம் - அம்மன் மாசி மகத்தன்று வங்க கடலுக்கு  எழுந்து அருளும்போது எடுக்கப்பட்டது.

அன்புடன் : அல்லிக்கேணி மைந்தன்.

8th Aug 2016.









No comments:

Post a Comment