Wednesday 10 January 2018

கோதா தேவி திருவடிகளே சரணம் !! மூர்க்கர்களும் மூடர்களும் !! பேசினால் வேறு என்ன ??

கோதா தேவி திருவடிகளே சரணம் !! மூர்க்கர்களும்  மூடர்களும் !! பேசினால் வேறு என்ன ??

ஒரு வக்கிரம் பிடித்த மூர்க்கன் நாம் வணங்கும் தெய்வமான கோதை பிராட்டியை பற்றி பிதற்றினான்.  நமது சம்பிரதாய நூல்களான 'குரு பரம்பரை பிரபாவமும் "  'ஆறாயிரப்படி' போன்ற அற்புத வியாக்கினங்களும், மேலும் லட்சக்கணக்கான நூல்களும் இருக்க ஒரு தகர சிப்பி,  இன்னமும் அடிமைத்தனம் மோகித்து, ஏதோ அமெரிக்க நூலில் உள்ளதாக உளறியது.

அப்படி உளறி வாயும், அதற்கு மேடை அமைத்து அமர்ந்திருந்த பத்திரிகையாளர்களும் அதற்கான துர்ப்பயனை நிச்சயம் விரைவில் அனுபவிக்க வேண்டும் என்பது பக்தர்களின் உள்ளக் குமுறல். 

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.


ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு

சென்னை:‛‛தமிழை ஆண்டாள்'' என்ற தலைப்பில் ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு, மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதன் விபரம்: 'தமிழை ஆண்டாள்' என்ற கட்டுரை மூலம் கவிஞர் வைரமுத்து தனக்கு தமிழும் தெரியாது, தமிழர் பண்பாடும் தெரியாது என்பதை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த கட்டுரையின் நோக்கம் வைணவர்கள் நாளும் போற்றி வணங்கிடும் ஆண்டாளை இழிவு படுத்துவதற்கே எழுதப்பட்டது.


வைரமுத்துவுக்கு சில கேள்விகள்:
* ஆண்டாளை தேவதாசி என்று மேல் நாட்டு அறிஞர் குறிப்பிட்டுள்ளதைக் கட்டுரைக்குப் பொருத்தமில்லாத ஒரு செய்தியை முனைப்புடன் கொடுக்க முற்படுவானேன். அதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? இந்தியப் பண்பாட்டை, ஓர் மதக் கொள்கையைப் புரிந்து கொள்ள மேல்நாட்டு அறிஞர்களால் முடியுமா?

* மரபுகளின் மீதான அத்துமீறல் ஆண்டாள் வாழ்வில் அடிக்கடி நேர்கிறது' என்பது வைரமுத்துவின் பிதற்றல்களில் ஒன்று. ஆண்டாள் இறைவனின் பத்தினிகளில் ஒருவரின் அவதாரமாகக் கொள்ளப்படுகிறார்.  பூமாதேவி, ஸ்ரீதேவி, நீளை எனப்படும் மூன்றாம் தேவி. இவர்கள் எப்போதும் இறைவனுடன் இணைந்தே காணப்படுகின்றனர். நீளையினுடைய அவதாரமே நப்பின்னை. ஜல்லிக்கட்டின் தலைவனே கண்ணன். தமிழர்களுடைய முல்லை நிலப் பண்பாட்டை ஆழ்வார்களுடைய பாசுரங்களில் காணலாம். நுனிப்புல் மேயும் வைரமுத்துவிற்கு இவை தெரியாது..

திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார் தலைவி நிலையில் (மனத்தளவில்) தம்மை உள்ளத்தில் கொண்டு கண்ணன் மீது காதல் பாடல்களைப் பாடியுள்ளனர். ஆண்டாளோ பெண்ணாகவே பிறந்து, கண்ணன் மீது காதல் கொண்டாள். நாச்சியார் திருமொழியில், கண்ணனை அடைய வேண்டும் என்னும் வேட்கையை வெளிபடுத்துகிறாள் ஆண்டாள், அது தமிழ் இலக்கிய மரபின் ஓர் கூறு. இதைக் கொச்சைப் படுத்தி எழுதியிருப்பதுதான் விந்தையிலும் விந்தை.

*'தெய்வம், கடவுள் ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாடு பற்றி வைரமத்து கூறியது, ஓர் மரபு மீறிய விளக்கம். வைரமுத்துவை விட பன்மடங்கு அறிவுடையார் நிகண்டுகளைப் படைத்தவர்கள். அவர்கள் சொல்லும் பொருளே ஏற்றுக் கொள்ளப்படும்.

*வர்க்க பேதம், ஜாதிபேதம் எல்லாம் மக்களை மதி மயக்க உருவாக்கப்பட்ட சொற்கள். 8ம் நூற்றாண்டில் இது போன்ற எண்ணங்கள் கிடையாது அனைவரும் சமுதாயத்துக்குரிய கடமைகளைச் செய்து வந்தனர். ஆண்டாளின் பெருமையை விளக்க, வர்க்க, ஜாதிப் பிரிவுகள் பற்றிய குறிப்பு தேவையற்றது.

*'எப்படி ஆண்டாள் கல்லான கடவுளைக் கைப்பிடித்தாள்' என்று பிதற்றியுள்ளார். அது எங்கள் நம்பிக்கை. நீ கொண்டாடும் மற்றைய மதத்தினரிடம் இது போன்ற கேள்வியை எழுப்பி இருப்பாயா?

*பாகவதத்தில் காத்தியாயினி (கார்த்தியாயினி என்று வைரமுத்து கூறியது தவறு) நோன்பு கண்ணனை அடைவதற்காக நோற்கப்பட்டது. திருப்பாவையிலும் அதேபோன்று கண்ணனை அடைவதற்கே பாவை நோன்பு கொண்டாடப்பட்டது. வைணவ உரை ஆசிரியர்களான பெரியவாச்சான் பிள்ளை, அழகியமணவாளப் பெருமாள் நாயனார் ஆகியோர் இதைத் தெளிவுபடுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


நன்றி மருத்துவர் அய்யா. கு.இராமதாஸ் அவர்கள் Dr. Ramdoss அய்யா அவர்களின் அறிக்கை....
ஆண்டாள் சர்ச்சை: மக்கள் மனதை புண்படுத்தும் கருத்துகள் கூடாது!  ---அறிக்கை ---
தினமணி நாளிதழில் ‘தமிழின் ஆண்டாள்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து எழுதிய கட்டுரையில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளை இழிவுபடுத்தும் வகையில் தெரிவித்துள்ள கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. எழுதியக் கட்டுரையின் தலைப்புக்கு சற்றும் தொடர்பில்லாத வகையில் ஆண்டாள் குறித்த கற்பனை மற்றும் யூகங்களை கவிஞர் திணித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
‘தமிழின் ஆண்டாள்’ கட்டுரையில் ஆண்டாளின் சிறப்புகளைப் பற்றி அடுக்கிக் கொண்டு வரும் கவிஞர் வைரமுத்து இடையிடையே சில வினாக்களைத் தொடுத்து, அதற்கு பதிலளிப்பதாகக் கூறி ஆண்டாளை குலமறியா பெண்ணாக சித்தரிக்க முயன்றிருக்கிறார். அதன் அடுத்தக்கட்டமாக அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்ட Indian Movement: some aspects of dissent, protest and reform என்ற நூலில் ஆண்டாள் குறித்து,‘‘Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple’’ என்று குறிப்பிடப் பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி ஆண்டாளை வணங்குபவர்களையும், அவரது பாடல்களை நேசிப்பவர்களையும் காயப்படுத்தியிருக்கிறார். இது சர்ச்சையான பிறகு தமக்கு எதிரான கொந்தளிப்பைக் குறைக்கும் வகையில் தமது வரிகள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருந்துவதாகத் தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்துவின் இந்த விளக்கம் காயப்பட்ட மனங்களுக்கு எந்த வகையிலும் மருந்தாக அமையாது.
இண்டியானா பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் ஆண்டாள் குறித்து இடம்பெற்றுள்ள கருத்துகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆண்டாளைப் பற்றி அறியப்படாத நாட்டில் ஆய்வு என்ற பெயரில் அவரைப் பற்றி எவர் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதி பட்டம் பெற்று செல்லலாம். ஆனால், ஆண்டாள் வாழ்ந்த மண்ணில், அவரை வணங்குபவர்கள் வாழும் மண்ணில் அவர் குறித்த அடிப்படையற்ற சர்ச்சைக் கருத்தை பயன்படுத்துவதற்கு முன் வைரமுத்து பத்தாயிரம் முறையாவது யோசித்திருக்க வேண்டும். இந்தக் கருத்தை பக்தர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று வைரமுத்து குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும் போது, இப்படி ஒரு சர்ச்சையை ஏற்படும் என்பதை அறிந்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இதை அவர் தவிர்த்திருக்க வேண்டும்.
ஆண்டாள் குலமறியாத பெண் என்பதையும் ஏற்க முடியாது. ஆண்டாளின் பாசுரங்களில் மிகத் தெளிவாக “பட்டர்பிரான் கோதை”, “வில்லி புதுவை நகர்நம்பி விட்டு சித்தன் வியன்கோதை” என்று பலவாறாக கோதையின் சுய அடையாளம் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. எங்கோ இண்டியானா பல்கலைக்கழக நூலில் இடம்பெற்றுள்ள கருத்தை மேற்கோள் காட்டிய கவிஞருக்கு ஆண்டாள் பாசுரத்தில் இடம் பெற்றுள்ள அவரது அடையாளங்கள் தெரியாமல் போனது மிகவும் துரதிருஷ்டவசமானது தான்.
கவிஞர் வைரமுத்து தமிழுக்கு கிடைத்த தலைசிறந்த எழுத்தாளர், கவிஞர் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதுவரை வேறு எவரும் சாதிக்காத வகையில் குடியரசுத் தலைவர் விருதை 6 முறையும், குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருதையும் பெற்றவர் அவர். ஆண்டாளை நன்கு அறிந்த அவர் இப்படி ஓர் ஆராய்ச்சியில் இறங்கியிருக்க வேண்டுமா?
காலத்தால் அழிக்க முடியாத இலக்கியம் படைத்த ஆண்டாள் தமிழர்களின் அடையாளம் ஆவார். இது ஒருபுறமிருக்க சமூக பொறுப்புள்ளவர்கள் மக்களின் உணர்வோடு விளையாடும் கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். கருத்துரிமை என்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழங்கப் பட்டுள்ளது என்றாலும் கூட, அது மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் இருக்க வேண்டும்.
தமிழகம் நல்லிணக்கத்தின் பூமி. அது காப்பாற்றப்பட வேண்டும். எனவே, எந்தவொரு மதம், எந்தவொரு சமுதாயம், எந்தவொரு நம்பிக்கை குறித்தும் வெறுப்பு கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்த்து, தமிழகத்தில் அமைதி, ஒருமைப்பாடு, நல்லிணக்கம் ஆகியவை தழைத்தோங்க பங்களிக்க வேண்டும்.